ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்த காவலர்..! முன்னின்று இறுதிச்சடங்குளை செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!

By Manikandan S R SFirst Published Nov 13, 2019, 6:17 PM IST
Highlights

சென்னை அருகே ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த இரண்டு பேருக்கு காவலர் ஒருவர் இறுதி மரியாதையை செய்துள்ளார்.

சாலையோரங்களிலும் கோவில் வாசல் போன்ற இடங்களிலும் பலர் தங்கி பிச்சை எடுத்து வாழ்ந்து வருகின்றனர். எந்த உறவுகளும் இல்லாமல் சுற்றித்திரியும் இவர்களை பாதுகாக்க அரசும் தொண்டு நிறுவனங்களும் பணியாற்றி வருகின்றன. இவ்வாறு வாழ்பவர்களில்  சிலர் உடல்நலமின்றி சாலைகளிலேயே மரணமடையும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. அப்படி உயிரிழப்பவர்களை சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து அடக்கம் செய்து இறுதி மரியாதை செலுத்துவார்கள். அப்படி ஒரு நிகழ்வு சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் சுரேஷ். அங்கிருக்கும் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். பணியில் இருக்கும் போதே சமூக செயல்களும் செய்து வந்திருக்கிறார். இதனிடையே இரண்டு ஆதரவற்ற பிணங்கள் அடக்கம் செய்ய ஆள் இல்லாமல் இருப்பதாக மருத்துவமனையில் இருந்து காவல்நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.

சற்றும் யோசிக்காத சுரேஷ் தனது சொந்த செலவில் பிணங்களை அடக்கம் செய்ய முடிவெடுத்தார். அதன்படி இரண்டு உடலைகளையும் மருத்துவமனையின் முறையான அனுமதியுடன் பெற்றுக்கொண்டார். அவை துணியால் சுற்றி ஆம்புலன்ஸ் மூலமாக சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல்களை புதைத்த சுரேஷ், சமாதிக்கு மாலை அணிவித்து  சூடனும் பத்தியும் ஏற்றி வைத்தார். பின்னர் உறவினர்கள் செய்வது போல பால் ஊற்றி இறுதி மரியாதை செலுத்தினார். 

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. காவலரின் மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

 

click me!