BSP Amstrong: தமிழக அரசியலில் ஆம்ஸ்ட்ராங் உச்சம் தொடுவார் என எதிர்பார்த்தேன்; அன்புமணி இரங்கல்

By Velmurugan s  |  First Published Jul 5, 2024, 10:59 PM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், இன்று மாலை கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் பொதுவாழ்க்கைக்கு வந்த நாளில் இருந்தே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடுமையாக உழைத்தவர். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான பொருளாதாரம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தவர்.  அவரால் கல்வி கற்று, சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளமாகும்.

Latest Videos

Amstrong: பகுஜன் சமாஜ் தலைவர் வெட்டி படுகொலை; நண்பனின் இழப்பை தாங்காமல் கதறி அழுத பா.ரஞ்சித்

மருத்துவர் அய்யா அவர்களின் நண்பரான கன்ஷிராம் அவர்களால் உருவாக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஆம்ஸ்ட்ராங், மருத்துவர் அய்யா அவர்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பட்டியலின மக்களுக்காக மருத்துவர் அய்யா அவர்கள் தொடக்க காலம் முதல் மேற்கொண்ட பணிகளை நன்றியுடன் அடிக்கடி நினைவு கூறும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், மருத்துவர் அய்யா அவர்கள் தான் பட்டியலின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட தலைவர் என்பதையும் பல தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். அம்பேத்கரின் சிலைகளை தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் திறந்த தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்பதால் அவர் மீது தாம் மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும் பல இடங்களில் பேசியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டியவர். வயதில் மிகவும் இளையவரான அவர், தமிழக அரசியலில் பல உச்சங்களைத் தொடுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். தொடர்வண்டி தொழிற்சங்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் என்னுடன் ஒன்றாக கலந்து கொண்டவர். ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றவர் ஆம்ஸ்ட்ராங். அப்படிப்பட்டவர் திடீரென ஒரு நாள் மாலைப் பொழுதில் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவு வளர்ச்சி சார்ந்த தலித் அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.

உரிமையாளரை கடத்தி நிலத்தை அபகரிக்க முயற்சி; பாஜக பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது

ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். அப்படிப்பட்ட ஒருவரை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்கிறது என்றால் தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருக்கிறதா? அவருக்கு எதிராக சதி வேலைகள் ஏதேனும் நடைபெறுகிறதா?  என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட தலைவரை எச்சரிக்க வேண்டியதும், சில தருணங்களில் அவரது  பாதுகாப்புக்கு அவருக்கே தெரியாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் உளவுத்துறையின் கடமை. ஆனால், உளவுத்துறை செயலிழந்து விட்டது என்பதையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது.

கடந்த சில நாட்களில் கடலூரிலும், சேலத்திலும் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் நடந்த கொலைக்கு திமுகவினர் காரணமாக இருந்துள்ளனர். அவற்றின் தொடர்ச்சியாக இப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.  தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கு இந்த அளவுக்கு சீர்குலைந்திருப்பதற்கு காவல்துறையை தம்மிடம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் பெயரளவில் மட்டுமே அப்பொறுப்பில் இருப்பதும், அவரைச் சுற்றியுள்ள சக்திகள் தான் முதலமைச்சர்  எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்கின்றன என்பதும் தான் நிலைமை மோசமடைவதற்கு காரணமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கை பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடும் சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

click me!