ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 2வது நாளாக விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பயணிகள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா போன்ற நாடுகளில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து மோசமான வானிலை நிலவி வருகிறது. இதை அடுத்து சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் செல்லும் விமானங்களும், அந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
undefined
2வது நாளாக துபாயில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரவு 10 மணிக்கு துபாய் செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இது குறித்து பயணிகளுக்கு உரிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுண்டரில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஆனால் அதிகாரிகள் கவுண்டரை மூடி விட்டு சென்றனர்.
புதுச்சேரியில் இருந்து வந்த அபிலயன் கூறுகையில், துபாய் செல்ல வேண்டிய விமானம் மழையால் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். ஆனால் அதிகாரிகள் உரிய முறையில் பதில் சொல்லாமல் அலட்சியப்படுத்துகின்றனர். எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என கூறினார். தஞ்சாவூரை சேர்ந்த மலர்கொடி கூறுகையில், மகன், குடும்பத்தினர் துபாயில் வசிக்கின்றனர். விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். விமான கட்டணத்தை திரும்பி தர வேண்டும். அல்லது மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றார்.