OPS vs Annamalai : முடிந்தது தொகுதி பங்கீடு.. 20 தொகுதிகளில் பாஜக போட்டி.! ஓபிஎஸ்க்கு 0 - அண்ணாமலை அதிரடி

By Ajmal KhanFirst Published Mar 21, 2024, 3:57 PM IST
Highlights

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணிக்கு எந்த தொகுதியும் ஒதுக்கீடு செய்யவில்லை, எனவே ஓபிஎஸ் தேர்தலில் போட்டியிடாமல் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜகவில் தொகுதி பங்கீடு

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக கூட்டணி கட்சியில் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள  39 தொகுதிகளில் பாஜக 20 இடங்களிலும், பாமக 10 இடங்களிலும் போட்டியிடவுள்ளது. தமாக 3, அமமுக 2 இடங்கள், பாரிவேந்தர். ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், தேவநாதன் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ் அணிக்கு தொகுதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ்- பாஜக இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் தாமரை சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ் மறுத்துவிட்டார். மேலும் ஓபிஎஸ் அணி எதிர்பார்த்த தேனி, ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளும் இல்லையென முடிவாகி விட்டது. 

வேட்பாளர் பட்டியல் எப்போது.?

இதனால் ஓபிஎஸ் முடிவு தனது மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தேர்தலில் போட்டியிடாமல், பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அல்லது தனி சின்னத்தில் போட்டியிடலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவு நாளை ஓபிஎஸ் அறிவிக்கவுள்ளார். இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, வேட்பாளர் பட்டியலோடு டெல்லி செல்லவுள்ளதாக கூறினார். இன்று மாலைக்கு மேல் வேட்பாளர் அறிவிப்பு எப்போது வேண்டும் என்றாலும் வரலாம் என கூறினார்.  மேலும் 39 தொகுதிக்கான பங்கீடு முடிந்துவிட்டது. பாஜக 20 தொகுதிகளில் போட்டி, 4 தொகுதிகளில் பாஜகவின் கூட்டணி கட்சியினர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறினார். 

ஓபிஎஸ்க்கு தொகுதி என்ன.?

பாஜக தேசிய கட்சி, மாநிலத்தில் இருந்து வேட்பாளர் பட்டியல் அறிவிப்பது முறை இல்லை. கடந்த 3 நாட்களாக கூட்டணி தலைவர்கள் சுமூகமாக பேசிமுடிவு செய்து விட்டோம். எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிட்டது.எல்லோரும் வளர வேண்டும். யாரையும் நெருக்கி பாஜக வளர வேண்டும் என்ற அவசியம் இல்லையென கூறினார். மேலும் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகளில் நிற்கிறார்கள். ஓபிஎஸ் தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்..! தனி சின்னத்தில் போட்டியிடுவோம்- என்ன முடிவெடுக்க போகிறார் ஓபிஎஸ்.?

click me!