Omicron India: அச்சுறுத்தும் ஒமிக்கிரான் தொற்று… தமிழ்நட்டில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு? இன்று அவசர ஆலோசனை!

By manimegalai aFirst Published Dec 23, 2021, 9:37 AM IST
Highlights

இந்தியாவில் ஏற்கெனவே உருமாறிய டெல்டா வகை கொரோனா பேரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவின் புதுவரவான ஒமிக்கிரான் வகை கொரோனா தேசம் முழுவதும் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் ஏற்கெனவே உருமாறிய டெல்டா வகை கொரோனா பேரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவின் புதுவரவான ஒமிக்கிரான் வகை கொரோனா தேசம் முழுவதும் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா கிருமி தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. வரலாற்றில் பேரழிவுகளை ஏற்படுத்திய இந்த நச்சுக் கிருமி பல்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிக்கும் அடங்கவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் புதிய வகையில் உருமாறி மக்களை தாக்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஏற்கனவே உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று லட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்டது. இந்தியாவின் மருத்துவ உட்கட்டமைப்பு, பொருளாதாரம் ஆகியவற்றை டெல்டா வகை கொரோனா சிதைத்துச் சென்றுள்ளது.

டெல்டா வகை கொரோனாதான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் உருமாறியுள்ள ஒமிக்கிரான் வகை கொரோனா தற்போது உலக நாடுகளை அலற விட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24 மாதம் தேதி கண்டறியப்பட்ட ஒமிக்கிரான் தொற்று உலகம் முழுவதும் 106 நாடுகளில் வியாபித்துள்ளது. ஒவ்வொரு நாடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தலும் ஒமிக்கிரான் தொற்று மெல்ல, மெல்ல ஊடுறுவி வருகிறது. இந்தியாவில் கடந்த 2-ஆம் தேதி நுழைந்த ஒமிக்கிரான் தொற்று இதுவரை 200-க்கும் அதிகமானோரை தாக்கியுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒமிக்கிரான் பரவல் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

இந்தியாவில் கடந்த 4 நாட்களில் ஒமிக்கிரான் தொற்று பரவல் இரட்டிப்பாகியதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள மாநில, யூனியன் பிரதேச அரசுகளை அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை பிறப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் ஒமிக்கிரான் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியிருக்கிறது. இந்தநிலையில் ஒமிக்கிரான் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் உடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் மற்றும் சுகாதார நிபுணர்கள் கலந்துகொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கை பிறப்பிப்பது குறித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பரவிய ஒமிக்கிரான் தொற்று தற்போது ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் வேகமெடுத்துள்ளது, தமிழ்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஒமிக்கிரான் தொற்று ஒருவருக்கு மட்டும் இருப்பாதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், 30-க்கும் அதிகமானோரை தொற்று தாக்கியிருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களும் மக்களை அச்சமடையச் செய்துள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஒமிக்கிரான் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இறையன்பு இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தின் நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வழியாக நடைபெறும் இக்கூட்டத்தில் பண்டிகை காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதால் அதுகுறித்த முக்கிய முடிவும் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு வந்த 149 பேரில், 100 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்ப்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 49 பேர் கட்டாய வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறனர்.

click me!