ஐடி கார்டு இல்லாம வேலை செய்யக்கூடாது… - டாஸ்மாக் ஊழியர்களுக்கு மேலாண் இயக்குனர் உத்தரவு

By Asianet TamilFirst Published Aug 7, 2019, 7:50 AM IST
Highlights

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய பணி நேரத்தில் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய பணி நேரத்தில் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய நண்பர்கள், உறவினர்களை வைத்து வேலை செய்து வருவதாக புகார் எழுந்தது. இந்தநிலையில், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சுற்றறிக்கை:

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சில்லறை விற்பனைக் கடைகளில் ஆய்வு செய்யும் சிறப்பு பறக்கும் படை குழுவினர் மற்றும் இதர அதிகாரிகள் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளை திடீர் தணிக்கை செய்யும் போது பெரும்பாலான கடைகளில் கடைப்பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை அணிந்து பணிபுரிவதில்லை. அது தவிர கடை ஊழியர்களுக்கு பதிலாக அவரவர் நண்பர்கள், உறவினர்கள் பணியில் இருப்பதும் அவ்வப்போது தெரியவருகிறது.

எனவே, உயர் அதிகாரிகள் திடீர் ஆய்வுக்கு செல்லும் பொழுது கடை பணியாளர்கள் அடையாள அட்டையை பணி நேரத்தில் அணியாத காரணத்தினால் பணியாளர்கள் வெளிநபர்களா அல்லது கடை பணியாளர்களா என தெரிவதில்லை.

எனவே, அனைத்து மாவட்ட மேலாளர்களும், தங்களுடைய மாவட்டத்தில் பணிபுரியும் கடைபணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதா அல்லது வழங்கப்பட்டிருந்து அவை பழுதடைந்திருக்கிறதா அல்லது நல்ல முறையில் இருக்கிறதா என்பதை அறிந்து இல்லை எனில் அடையாள அட்டை இல்லாமல் பணிபுரியும் அனைத்து கடைபணியாளர்களுக்கும் உடனடியாக அடையாள அட்டையை வழங்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் கடைப்பணியாளர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைபணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட மேலாளர்கள் அனைத்து கடைபணியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அறிவுரை வழங்க வேண்டும். மேலும், 1.8.2019 (நேற்று) முதல் பணி நேரத்தில் கடைப்பணியாளர்கள் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

click me!