தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை... அடித்து கூறும் சுகாதாரத்துறை செயலாளர்..!

By vinoth kumarFirst Published Jul 21, 2021, 1:53 PM IST
Highlights

கொரோனா 2-வது அலையின்போது, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையான, போதுமான ஆக்சிஜன் கிடைக்க தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. 

தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பலர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. மத்திய அரசின் ஆக்சிஜன் பங்கீட்டு கொள்கையை உச்ச நீதிமன்றமும் விமர்சனம் செய்து இருந்தது. இந்நிலையில், இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக எத்தனை பேர் பலியானார்கள், ஆக்சிஜன் காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை 2ம் அலையின் போது மறைக்கப்பட்டதா என்று சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பின.

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார்;- 2வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது என தெரிவித்திருந்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக அடுத்தடுத்து செய்திகள் வெளியான நிலையில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தவறான தகவல் அளித்ததற்காக மத்திய இணையமைச்சர் மீது நடவடிக்கை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தன. 

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது உண்மை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- கொரோனா 2-வது அலையின்போது, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவையான, போதுமான ஆக்சிஜன் கிடைக்க தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. 

ஆக்சிஜன் சப்ளையைக் கண்காணிப்பதற்காவும், அதில் சிக்கல்களைத் தீர்க்கவும் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அதேபோல தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

click me!