10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும்..? அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Apr 20, 2020, 3:17 PM IST
Highlights

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என்பதை மீண்டும் உறுதி செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவலையும் வெளியிட்டார். 
 

கொரோனாவை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்துமே முடங்கியுள்ளன. கொரோனாவிலிருந்து தப்பிக்க சமூக விலகலும் தனிமைப்படுதலுமே ஒரே வழி என்பதால், கொரோனா மேலும் பரவாமல் தடுத்து விரட்டும் நோக்கில் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்குக்கு முன்பே 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தடைபட்டன. 12ம் வகுப்பு பொதுத்தேர்விலும் கூட, ஒரே ஒரு தேர்வு மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்பத்திலேயே நடத்திமுடிக்கப்பட்டது. ஆனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. 

ஆனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முக்கியமானது என்பதால், கண்டிப்பாக நடத்தப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறதே தவிர, ரத்து செய்யப்படவில்லை என்பதை தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் ஏற்கனவே உறுதி செய்துவிட்டன. 

எனவே 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு குறித்த அப்டேட்டை செய்வதற்காக இன்று செய்தியாளர்களிடம் பேசினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும். தேர்வு அட்டவணை, மே 3ம் தேதிக்கு பிறகு உறுதி செய்து அறிவிக்கப்படும். ஒரு நாள் விட்டு ஒருநாள் தேர்வுகள் நடத்தப்படும். மே மாதம் அதிகமான வெயிலின் காரணமாக, பொதுவாக கோடை விடுமுறையாக இருக்கும். ஆனால் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் அதையெல்லாம் பரிசீலிக்கும் நிலையில்லை என்பதால் மே மாதம் தேர்வு நடத்தித்தான் ஆக வேண்டும். தேர்வு அட்டவணை, மே 3க்கு பிறகு அறிவிக்கப்படும் என்றார்.

மாணவர்கள் 3 மணி நேரம் தான் தேர்வு எழுதப்போகிறார்கள். எனவே மே மாதம் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை. பொதுவாகவே தேர்வில் மாணவர்கள் இடைவெளிவிட்டுத்தான் அமர்த்தப்படுவார்கள் என்பதால், சமூக இடைவெளியை கடைபிடிப்பதிலும் எந்த சிக்கலும் இல்லையென்றார்.

நீட் தேர்வு குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகள் கட்டாயமாக கட்டணம் வசூலித்தால், புகார் அளிக்கலாம் என்றும் அப்படி கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
 

click me!