மாஸ்க் அணியாவிட்டால் வண்டி பறிமுதல்..! சென்னை மாநகராட்சி அதிரடி

By karthikeyan VFirst Published Apr 13, 2020, 9:40 PM IST
Highlights

சென்னையில் வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. இன்று 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1173ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவரும் போதிலும், பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த சில தினங்களாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனையை முடுக்கிவிட்டு கொரோனா தொற்றுள்ள அனைவரையும் கண்டுபிடித்து, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்காணித்து கொரோனாவை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

கொரோனாவிலிருந்த தப்பிக்க தனிமைப்படுதலும் சமூக விலகலுமே ஒரே வழி என்பதால் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்ல நேர்ந்தால் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துதான் வர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில்தான் அதிகபட்சமாக 208 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.  

எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாகவும் மேலும் யாருக்கும் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாகவும் பெருந்தொற்று தடுப்பு விதியின் கீழ், சென்னையில் வீட்டை விட்டு வெளியே வரும் அனைவருமே முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பைக், கார் என எந்த வாகனத்தில் வருபவராக இருந்தாலும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். இல்லையெனில் வாகனங்களுக்கான பாஸ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!