61 வீடுகள், 82 காலி மனைகள்... லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.1200000000 சொத்துக்கள் முடக்கம்...!

By vinoth kumarFirst Published Jul 23, 2019, 1:15 PM IST
Highlights

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான, 120 கோடி ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்துக்களை, அமலாக்கத் துறையினர் அதிரடியாக முடக்கியுள்ளனர். 

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான, 120 கோடி ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்துக்களை, அமலாக்கத் துறையினர் அதிரடியாக முடக்கியுள்ளனர். 

கோவையை சேர்ந்தவர் சான்டியாகோ மார்டின் (53) லாட்டரி சீட்டு தொழிலில் கொடி கட்டிப் பறந்தவர். தமிழகத்தில், லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்தாலும், மேற்குவங்கம், சிக்கிம், அசாம் என்று இந்தியாவின் பல மாநிலங்களில் லாட்டரியில் கல்லா கட்டி, வி.வி.ஐ.பி-யாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  லாட்டரி தொழில் மட்டுமல்லாமல் ஹோமியோபதி மருத்துவமனை, மில்கள், டி.வி சேனல், சினிமா என்று மார்ட்டின் அண்டு கோ அனைத்து துறைகளிலும் வலம் வந்துகொண்டிருக்கிறது. 

இந்நிலையில், நாடு முழுவதும் தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் முறைக்கேடாக சொத்து சேர்த்ததற்கான ஆவணங்களை கைப்பற்றியதாக வருமான வரிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் மார்ட்டின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

விசாரணையில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2009 - 10-ம் ஆண்டில் லாட்டரி மூலம் ஈட்டிய 910.3 கோடி ரூபாய் வருவாயை மறைத்து அதை தொழிலதிபர் மார்ட்டின், 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ள அமலாக்கத்துறை லாட்டரி விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ள சிக்கிம் மற்றும் கேரளா அரசுகளிடம் போலியான கணக்குகளை காண்பித்து முறைகேடாக கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

 

இந்த சட்ட விரோத பணி பரிமாற்றம் மூலம் வாங்கிய சொத்துகளை கண்டறிந்து ஏற்கனவே 138.5 கோடி மதிப்புடைய சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, தற்போது 119.6 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை முடக்கியுள்ளது. கோவையில் உள்ள மார்ட்டினுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள 61 வீடுகள் மற்றும் 82 காலி மனைகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 

click me!