நாளைக்கே கடைகளை மூடணுமா?... கொதித்தெழுந்த கோயம்பேடு வியாபாரிகள்... தீயாய் தகிக்கும் போராட்டம்!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 9, 2021, 11:08 AM IST
Highlights

நாளை கோயம்பேட்டில் உள்ள சில்லறை வியாபார காய்கனி கடைகளை மூட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தேர்தல் நேரத்தில் தீயாய் பரவிய கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏப்ரல் 10ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் கோயம்பேடு உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டிற்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் ஏப்ரல் 10ம் தேதி முதல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பின் படி நாளை கோயம்பேட்டில் உள்ள சில்லறை வியாபார காய்கனி கடைகளை மூட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் கோயம்பேடு நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கோயம்பேட்டில் மொத்தம் 1834 கடைகளில் சில்லறை வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில், நாளையே கடைகளை மூட வேண்டும் என கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடைகளை மூட வலியுறுத்தும் அரசு, தங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

click me!