
வளிமண்டல கீழடுக்கு சூழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை முடிந்து பனி காலம் தொடங்கி விட்டது. இரவிலும் அதிகாலையிலும் குளிர் வாட்டினாலும் பகல் நேரங்களில் பங்குனி வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், தென் தமிழக மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
23-ம் தேதி தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 24-ம் தேதி தென் தமிழகம் மற்றும் திருப்பூர், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 22 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.