தாறுமாறாக உயர்ந்த தனியார் பேருந்து கட்டணங்கள்..! போக்குவரத்து நெரிசலில் முடங்கிய சென்னை..!

By Manikandan S R SFirst Published Oct 27, 2019, 9:44 AM IST
Highlights

பண்டிகை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற அரசின் விதியையும் மீறி பல பேருந்துகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டன. தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் 1,500 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது .இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் சென்னையில் மக்கள் தொகை நெருக்கம் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலும் கடுமையாக இருக்கிறது. வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறைகளில் சென்னையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விடுகிறது. 

வெளியூரில் இருந்து வேலைக்காக சென்னையில் தங்கி இருப்பவர்கள் இதுபோன்ற விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்தநிலையில் இன்று தீபாவளி பண்டிகை என்பதால் குடும்பத்துடன் கெண்டாட பெரும்பாலானோர் வியாழக்கிழமை முதல் சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். இதனால் கடந்த 3 தினங்களாக சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் நகரில் இருந்து வெளியேற சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. கடந்த 3 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 2.5 லட்சம் பேர் சென்னை யில் இருந்து சென்றுள்ளனர்.

சென்னையில் இருந்து மக்கள் வெளியூர் செல்வதற்காக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படும் என்பதால் தற்காலிக பேருந்து நிலையங்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டன. கேகே நகர், தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் ஏற்கனவே பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆம்னி பஸ்களிளிலும் பயணிகள் கூட்டம் அதிகம் அலைமோதியது. பண்டிகை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற அரசின் விதியையும் மீறி பல பல பேருந்துகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டன. தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் 1,500 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது .இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் வேறு வழியின்றி கூடுதல் கட்டணத்தில் பயணிகள் பயணம் செய்தனர்.

ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தீபாவளிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் பல ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதை காணமுடிந்தது.

click me!