ஆயிரக்கணக்கில் போலீசார் குவிப்பு..! பதற்றத்தில் தலைமை செயலகம்..!

By Manikandan S R SFirst Published Feb 19, 2020, 9:58 AM IST
Highlights

சென்னை மாநகரைச் சுற்றிலும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சுமார் 2 ஆயிரம் தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

அண்மையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பலவற்றில் குடியுரிமைதிருத்த சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் அதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக உள்ளிட்ட முக்கிய எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இஸ்லாமிய அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தன. இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென இந்திய மக்கள் மன்ற தலைவர் வாராகி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும், சட்டம் ஒழுங்கும் சீர்கெட வாய்புள்ளதாகவும் மனுதாரர் சார்பாக கூறப்பட்டிருந்தது.

அதை விசாரித்த நீதிபதிகள், வரும் மார்ச் 11 வரை சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். ஆனால் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக திட்டமிட்டப்படி இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் எதிர்மனுதாரராக தங்களை சேர்க்கவில்லை என்பதால் இடைக்கால தடை தங்களுக்கு பொருந்தாது என்று அவர்கள் தரப்பில் கூறியுள்ளனர். இந்தநிலையில் தடையை மீறி இன்று போராட்டம் நடத்த பலர் திரள கூடும் என்பதால் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரைச் சுற்றிலும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சுமார் 2 ஆயிரம் தலைமை செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தடையை மீறி பேரணியாக வருபவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஆதரவற்றோர்களின் அடைக்கலம்' சிவானந்தா குருகுலம் ராஜாராம் மரணம்..!

click me!