மும்பை விளம்பர பலகை விபத்து எதிரொலியாக சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் சூறாவளி காற்று காரணமாக 120 அடி உயர ராட்சத விளம்பர போர்டு சரிந்து அருகில் இருந்த பெட்ரோல் நிலையம் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், மும்பை விபத்து எதிரொலியாக சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்ட விரோதமான பேனர்களை அகற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி, அனுமதியின்றி வைக்கப்பட்ட 460 பேனர்களை இதுவரை அகற்றியுள்ளது.
பேனர்களை அகற்றுவதற்கு மூன்று கட்ட அணுகுமுறைகளை சென்னை மாநகராட்சி கையாள்கிறது. பேனர்கள் கட்டமைப்பு நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தணிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அவை பலவீனமாக இருந்தால் முழு கட்டமைப்புகளும் அகற்றப்படும்.
“நாங்கள் குறிப்பாக பொது இடங்கள், பெட்ரோல் பங்குகள், பேருந்து நிழற்குடைகள், மேம்பாலங்கள் போன்றவற்றில் உள்ள விளம்பர பேனர்களை ஆய்வு செய்து வருகிறோம். வழக்கு நிலுவையில் உள்ள விளம்பர பேனர்களை கூட நாங்கள் விட்டு வைப்பதில்லை.” என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “விளம்பர பலகை நிறுவ இதுவரை மாநகராட்சிக்கு 1,100 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், அவற்றில் 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களில் அனுமதியின்றியும், உரிய அளவீடுகளை தாண்டியும் வைக்கப்பட்ட 460 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்படும். சாலையோரம், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றார்.
மே 18,19 தேதிகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரயில்கள் ரத்து!
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற மிகப்பெரிய நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்தது. அந்த சமயத்தில் பருவமழை, சூறாவளிக் காற்றால் உயிர்களுக்கும், சொத்துகளுக்கும் சேதத்தை ஏற்படுத்திய நகரம் முழுவதும் நிரம்ப்பியிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, மும்பை விளம்பர பலகை விபத்து எதிரொலியாக, சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பெரிய நடவடிக்கையை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.