டெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..! தொடரும் சோகம்..!

By Manikandan S R SFirst Published Oct 22, 2019, 1:46 PM IST
Highlights

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மனைவி மாலதி. இந்த தம்பதியினருக்கு திவ்ய தர்ஷினி(8) என்கிற மகள் இருக்கிறார். சிறுமி அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இவருக்கு கடந்த 1 வாரத்திற்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து திவ்ய தர்ஷினியை மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் வைத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுமி திவ்ய தர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்த தகவலை அவரது பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதைக்கேட்டு அவர்கள் கதறி துடித்தனர். 

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது பரிசோதனைகளின் முடிவில் தான் சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தாரா என்பது தெரிய வரும் என்றனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அக்ஷிதா என்கிற 7 வயது சிறுமியும், அரவிந்தன் என்கிற 10 வயது சிறுவனும் மர்ம காய்ச்சலால் இரண்டு நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதை அடுத்து டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து சுகாதாரத்துறை சார்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

click me!