
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இபாஸ் கட்டாயம் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டத்தின் போது மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், அதனை தமிழக அரசு ரத்து செய்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் தமிழகம், கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள், கொரோனா குறித்து பயமில்லாமல் முக கவசங்களை அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் வெளியில் சென்று வருகின்றனர். இன்னும் சிறிது நாட்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியான பயணமாக தமிழகத்தில் 3 நாட்கள் வரை தங்குவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.