விரைவில் சிப்புடன் இ-பாஸ்போர்ட்… - வெளியுறவு துறை தகவல்

By Asianet TamilFirst Published Jul 24, 2019, 12:58 AM IST
Highlights

விரைவில் சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட்கள் விநியோகிக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

விரைவில் சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட்கள் விநியோகிக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஒருவேளை சிப்பில் சட்டவிரோதமாக மாற்றங்கள் செய்தால் அது கணினியில் கண்டறியப்படும். இதனால் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட்டுக்கு கணினியில் அங்கீகாரம் கிடைக்காது. விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள் டிஜிட்டல் முறையில் சிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும். இந்த சிப்பானது பாஸ்போர்ட்டில் பதிக்கப்படும். நாசிக்கில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகத்திடம், கண்ணுக்கு புலப்படாத எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்களை தயாரிப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக ஐஎஸ்பி நிறுவனமானது, சர்வதேச அளவில் 3 கட்ட ஒப்பந்தபுள்ளி மூலமாக எலக்ட்ரானிக் சிப்களை கொள்முதல் செய்துக் கொள்வதற்காகவும் அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி மற்றும் கொள்முதல் செய்வதற்கான செயல்முறைகள் முடிந்த பின்னர் இ பாஸ்போர்ட் உற்பத்தி தொடங்கப்படும். வெளியுறவு துறை அமைச்சகமானது கடந்த 2017ம் ஆண்டில் 1.08 கோடி பாஸ்போர்ட்களையும், 2018ம் ஆண்டு 1.12 கோடி பாஸ்போர்ட்களையும் வழங்கியுள்ளது என்றார்.

click me!