தமிழகத்தை அதிர வைத்த டாக்டர் சுப்பையா கொலை வழக்கு.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

By vinoth kumar  |  First Published Sep 15, 2022, 12:48 PM IST

தண்டிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், பாட்னா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான அஞ்சனா பிரகாஷ், இந்த வழக்கில் ஆஜராக தம்மை புதிதாக நியமித்துள்ளதால் வழக்கு விவரங்களை படிக்க வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்  ஒத்திவைத்துள்ளது.

நிலப் பிரச்சினை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Tap to resize

Latest Videos

பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது. இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும் மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, வாதத்தை தொடங்க தயாராக இருப்பதாக கூறினார்.

undefined

தண்டிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், பாட்னா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான அஞ்சனா பிரகாஷ், இந்த வழக்கில் ஆஜராக தம்மை புதிதாக நியமித்துள்ளதால் வழக்கு விவரங்களை படிக்க வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், "எத்தனை முறைதான் விசாரணையை ஒத்திவைப்பது?” என கேள்வி எழுப்பினர். “ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும் போது டெல்லி, மும்பை, கவுஹாத்தியிலிருந்து வழக்கறிஞர் வருகிறார்கள், அதற்காக தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவருக்கு யார் பதில் சொல்வது?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் மாதம் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், எந்த காரணத்தை கொண்டும் இனிவழக்கு விசாரணை தள்ளிவைக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

click me!