பவாரியா கொள்ளை கும்பலை வேட்டையாடிய டிஜிபி ஜாங்கிட் இன்று பணி ஓய்வு..!

By vinoth kumarFirst Published Jul 31, 2019, 3:16 PM IST
Highlights

தமிழகத்தை மிரட்டி வந்த பவாரியா கொள்ளை கும்பலை வேட்டையாடிய ஐபிஎஸ் அதிகாரியான டிஜிபி ஜாங்கிட் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். 

தமிழகத்தை மிரட்டி வந்த பவாரியா கொள்ளை கும்பலை வேட்டையாடிய ஐபிஎஸ் அதிகாரியான டிஜிபி ஜாங்கிட் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். 

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், 1985-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று நீலகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணியாற்றினார். இவர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியபோது, சாதி கலவரங்களை ஒடுக்கியதால், பிரபலமானார். 

பின்னர் டிஐஜியாக 1999-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, தஞ்சாவூர் சரகங்களில் பணியாற்றினார். பின்னர் மதுரை, திருநெல்வேலி நகர ஆணையராக பணியாற்றியுள்ளார். வடக்கு மண்டல, ஐ.ஜி.யாக இருந்தபோது, 2001-ல் தமிழகத்தில் ஊடுருவி, கும்மிடிப்பூண்டி, எம்.எல்.ஏ.வாக இருந்த, சுதர்சன் உள்ளிட்டோரை கொலை செய்த, வடமாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளை கும்பலை அடியோடு ஒழித்தார். இதுதான் ‘‘தீரன் அதிகாரம் ஒன்று’’ என்ற பெயரில் படமாக வெளி வந்துள்ளது. 

மேலும், சென்னை கூடுதல் ஆணையர் மற்றும் புறநகர் ஆணையராக பணிபுரிந்தவர். துப்பாக்கி சுடுவதில் சிறந்தவர். இவர் பல ரவுடிகளை சுட்டு வீழ்த்தியுள்ளார். வெள்ளை ரவி, பங்க்குமார் உள்ளிட்ட பல ரவுடிகள் இவரது காலத்தில்தான் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர், சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வர், ஜனாதிபதி, பிரதமர் பெயரில் வழங்கப்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். தற்போது, டி.ஜி.பி. ரேங்கில், கும்பகோணம், போக்குவரத்து விஜிலென்ஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த  ஜாங்கிட் இன்று ஓய்வு பெறுகிறார்.

click me!