நினைக்கும் போதே டிசம்பர் 2 பக்குனு இருக்கு.. பழைய நினைவுகள் கண் முன்னால் வந்து போகுது.. பிரதீப் ஜான்.!

By vinoth kumarFirst Published Dec 3, 2021, 7:50 AM IST
Highlights

சென்னையில் கடந்த 100 ஆண்டு கண்டிராத மழை மற்றும் வெள்ளத்தை 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு காண்பித்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் ஏற்படுத்திய பாதிப்பில் பலர் உயிரிழந்தனர்.

2015ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி பெய்த பேய் மழையை என்னால் மறக்க முடியாது. இன்னமும் நம் கண் முன்னால் வந்து செல்கிறது என தமிழ்நாடு வெதர்மேன்  பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த 100 ஆண்டு கண்டிராத மழை மற்றும் வெள்ளத்தை 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு காண்பித்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் ஏற்படுத்திய பாதிப்பில் பலர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, உணவு இல்லாமல் தவித்தது இன்னமும் நம் கண் முன்னால் வந்து செல்கிறது. இந்த சம்பவம் மிக மோசமான பேரிழவாக அப்போது பார்க்கப்பட்டது. 

இது தொடர்பாக தமிழ்நாடு வெர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- 6 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், அதிகாலை 3 - 4 மணிக்கு இடையே இருக்கும். வெளியில் மழை வெளுத்து வாங்கி கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 20 மணி நேரமாக மழை பெய்து கொண்டிருந்தது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 300 மில்லி மீட்டர் அளவைத் தாண்டியது. தாம்பரம், செம்பரம்பாக்கம் பகுதிகளிலோ அது 450 மில்லி மீட்டர் என்ற அளவுக்கு கொட்டி தீர்த்தது. தாம்பரம், செம்பரம்பாக்கம் போன்ற பகுதிகளில் அதுவரை அப்படி ஒரு பேய் மழை பெய்ததே இல்லை.

எனது முகநூலில் மெசேஜ்கள் குவிந்து கொண்டிருந்தன. முதல் நாள் இரவே கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட மெசேஜ்கள் வந்து குவிந்திருந்தன. அவற்றில் சிலவற்றை நான் ஓபன் பண்ணிப் பார்க்க முடியவில்லை. பெரும்பாலான மெசேஜ்கள், உதவி கேட்டு வந்திருந்தன. மழை எப்போது நிற்கும், படகு அனுப்புங்கள், உதவுங்கள், எங்களது பகுதியை வெள்ளம் சூழ்ந்து விட்டது , முதல் தளத்திற்கு வந்து விட்டது என்று பலரும் மெசேஜ் அனுப்பியிருந்தனர்.

எனது லேப்டாப்பில் சில நிமிடங்களுக்குத்தான் பேக்கப் இருந்தது. மின்சாரமும் இல்லை. இன்டர்நெட் வேகமும் 0.1- 0.2 கேபிபிஎஸ் ஆக இருந்தது. லேப்டாப் ஆஃப் ஆவதற்குள் ஒரு கடைசி அப்டேட்டைப் போட்டு விட்டுப் போகலாம் என நினைத்தேன். அப்போது மேகக் கூட்டம் சற்று பலவீனமடையத் தொடங்கியிருந்தது. எனவே மேலும் மழை நீடிக்காது என்ற அப்டேட்டை அப்போது போட்டேன். அதைப் போட்டு விட்டு நான் தூங்கப் போனபோது அதிகாலை 4 மணியாகும். அந்த மழை நாளில் எனது வாழ்க்கையே மாறிப் போகும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

2015 மழை நாட்களில் மின்சாரமும் இல்லாமல், டிவியும் இல்லாமல் எனது அப்டேட்டுகளை மட்டுமே மக்கள் நம்பினர். எனக்கு மிகப் பெரிய பொறுப்பை கொடுத்தனர் என பழைய நினைவுகளை பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.

click me!