அடுத்த அதிர்ச்சி..! தமிழகத்தில் 4 ஆக அதிகரித்த கொரோனா பலி..!

By Manikandan S R SFirst Published Apr 5, 2020, 8:55 AM IST
Highlights

துபாயில் இருந்து தமிழகம் வந்திருந்த 75 வயது முதியவர் ஒருவர் கடந்த 3ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்தார்

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் தற்போது தனது கோர முகத்தை காட்டி வருகிறது. நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்திருக்கிறது.

துபாயில் இருந்து தமிழகம் வந்திருந்த 75 வயது முதியவர் ஒருவர் கடந்த 3ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனைகளின் முடிவில் உயிரிழந்த 75 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்திருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

நேற்று விழுப்புரத்தில் ஒருவரும் தேனியில் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்தனர். ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருந்தது. இதற்கு முன்பாக மதுரையில் முதியவர் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகி இருந்தார். இந்த நிலையில் தற்போது ஏற்கனவே உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்திருக்கிறது.

click me!