வரும் நாட்களில் புதிய உச்சத்தை எட்டும் கொரோனா.. தேர்வை நடத்த இதுவே சரியான நேரம்..கோர்டில் நடந்த காரசார விவாதம்

By vinoth kumarFirst Published Jun 8, 2020, 4:26 PM IST
Highlights

அக்டோபர், நவம்பரில் கொரோனா உச்ச நிலையை அடைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, தேர்வுகளை தள்ளி நடத்துவதால்தான் அபாயம் அதிகரிக்கும் சூழல் உள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கில் வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டும் அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

அரசு தலைமை வழக்கறிஞர் இன்று விசாரணைக்கு வர முடியாது என்பதால் வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கும்படி அரசுத் தரப்பில்  கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். 10ம் வகுப்பு தேர்வு குறித்து பிற்பகல் 2.30 மணிக்குள் தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வு  ஒத்திவைப்பு முடிவை அரசு கூறவில்லை என்றால் நீதிமன்றமே தடை விதிக்க நேரிடும் என எச்சரித்திருந்தது. 

அதன்படி, பிற்பகல் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி வாதாடினார். அப்போது, தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா அதிகரிக்கும் என்பதால், இதுவே 10ம் வகுப்பு தேர்வை நடத்த சரியான நேரம் என்றும், தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழக அரசு தரப்பில் தேர்வு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் கொரோனா வைரசால் வரும் நாட்களில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் கூறி உள்ளனர். எனவே, தேர்வு நடத்த இதுவே சரியான நேரம். முக்கியத்துவம் வாய்ந்த தேர்வு என்பதால் 11 மாநிலங்கள் தேர்வை நடத்திவிட்டன. தமிழகத்தில், தேர்வுக்கு தடை விதிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. அப்போது, மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு மையங்களில் கிருமினி நாசினி தெளித்தல், மாணவர்கள் மாஸ்க் வழங்குதல் உள்ளிட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் கூறினார். குறுக்கிட்ட நீதிபதிகள் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்களிள் வாழ்வு பாதிக்கப்பட்டாலோ, இறக்க நேரிட்டாலோ யார் பொறுப்பு? இழப்பீடு வழங்குவதற்குபதிலாக அவர்களின் வாழ்வுக்கு யார் உத்தரவாதம்கொடுப்பார்கள்? என கேள்விகளால் துளைத்து எடுத்தனர். 

கொரோனா பாதிப்பை பொருத்தவரை தற்பொது அபாய நிலை இல்லை. அக்டோபர், நவம்பரில் கொரோனா உச்ச நிலையை அடைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, தேர்வுகளை தள்ளி நடத்துவதால்தான் அபாயம் அதிகரிக்கும் சூழல் உள்ளது, பேராபத்தாக முடியும்.’ என அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து,  தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

click me!