தயவு செய்து சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லாதீங்க..! வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..!

By Manikandan S R SFirst Published May 16, 2020, 2:49 PM IST
Highlights

அனைத்து வெளிமாநிலத் தொழிலாளர்களும் அவர் தம் விருப்பத்தின் பேரில் படிப்படியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியோடு அவர் தம் மாநிலங்களுக்குச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரயில்வே கட்டணம் உட்பட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம்

தமிழகத்தில் தங்கி வேலை பார்க்கும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் ஊரடங்கு காரணமாக அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. வேலையின்றி இருப்பதால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவெடுத்த தொழிலாளர்கள் போக்குவரத்து முடக்கப்பட்ட காரணத்தால் நடந்தே செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களில் சிலர் பலியாகும் சம்பவம் அண்மைகாலமாக நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்து பேசி தமிழக அரசு பிற மாநில தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும் பலர் தொடர்ந்து நடந்தும், வாகனங்களிலும் செல்ல முயல்வதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம் என முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்துவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. கடந்த 6-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை 55 ஆயிரத்து 473 வெளிமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 43 ரயில்களில் பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வெளிமாநிலத் தொழிலாளர்களும் அவர் தம் விருப்பத்தின் பேரில் படிப்படியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியோடு அவர் தம் மாநிலங்களுக்குச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரயில்வே கட்டணம் உட்பட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ பிற வாகனங்களின் மூலமாகவோ செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதுவரை, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!