
பள்ளி வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும், அனைவரும் இறங்கி விட்டார்களா? என்று உறுதி செய்த பிறகே வானகத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த வேண்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
விபத்தில் பள்ளி மாணவன் பலி
சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர். இவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் தீக்சித்(7) என்பவர் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் மோதியதில் தீக்சித் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வேன் ஓட்டுநர், பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் பெண் ஊழியர் இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் பள்ளி வேன் ஓட்டுநர் கவனக்குறைவாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததும் ஒரு காரணம் என அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்ட நிலையில் கைதான ஓட்டுநர் பூங்காவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சுற்றறிக்கை
* பள்ளி வாகனங்களை முறையாக பராமரித்து ஆண்டுதோறும் மோட்டார் வாகன ஆய்வாளர் இடம் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
* பள்ளி பேருந்தில் மாணவர்களை இருப்பிடத்திலிருந்து அழைத்து வரும் போது பேருந்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும்.
* பள்ளி வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும், அனைவரும் இறங்கி விட்டார்களா? என்று உறுதி செய்த பிறகே வானகத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த வேண்டும்.
* மாணவர்களை அழைத்து வரும் பள்ளிப் பேருந்துகள் ஆட்டோ ரிக்ஷாக்கள் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டுள்ளது பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.
* வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.
* மாணவர்களை ஏற்றி இறக்குவதற்கு ஓட்டுநர் உடன் ஒருவர் உதவியாளரையும் வைத்திருக்கவேண்டும்.
* வாகனத்தை ஓட்டும் போது சினிமா பாடல்களை ஒளிபரப்பக் கூடாது.
* மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லக்கூடாது.
* ஓட்டுநரின் குழந்தை குடும்ப புகைப்படம் ஒன்றை அவரது இருக்கைக்கு எதிரில் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும்.
* அவசர தேவைக்கு முக்கியமான தொலைபேசி எண்களை பேருந்தினுள் மற்றும் வெளியே பார்வையில் தெரியும் படி எழுதவேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.