சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சேவிகா(34). இவர் அண்ணாசாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மாம்பலத்தில் தனது தோழியுடன் அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
சென்னையில் தாயிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற ரேப்பிடோவில் சென்ற பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சேவிகா(34). இவர் அண்ணாசாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மாம்பலத்தில் தனது தோழியுடன் அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் தோழிகளுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி உள்ளார்.
பின்னர், வியாசர்பாடியில் வசிக்கும் தனது தாயிடம் ஆசி பெறுவதற்காக அதிகாலை ரேப்பிடோவில் புக் செய்து அந்த இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து பயணித்துள்ளார். தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே வந்து கொண்டிருந்த போது அதிகவேகத்தில் வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஹெல்மட் அணிந்திருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ஆனால், பின்னால், அமர்ந்திருந்த சேவிகா தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர். ஆனால், வரும் வழியிலேயே சேவிகா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பைக் டாக்ஸி ஓட்டுநருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் விபத்து தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். தனது பிறந்த நாளன்று இளம்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.