சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் ஊரடங்கு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் சிலர் தங்கி இருந்தனர். அவர்களில் 5 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. இந்த நிலையில் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 798 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 2,052 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர்.
அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,371 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்தில் தங்கியிருந்த காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அந்த ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் நாடு முழுவதும் இருக்கும் காவலர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச்சாவடிகள், சாலையோரங்கள் என கிடைக்கும் இடங்களில் தங்கி இருக்கும் காவலர்களுக்கும் அண்மை காலமாக தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் ஊரடங்கு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் சிலர் தங்கி இருந்தனர். அவர்களில் 5 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். காவலர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சென்னையில் மந்தைவெளி ரயில் நிலையம் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் ரயில் நிலையம் ஒன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.