சென்னை மக்களே உஷார்... கோயம்பேடு மார்க்கெட்டில் 50 வியாபாரிகளுக்கு கொரோனா..!

By vinoth kumarFirst Published Oct 12, 2020, 1:10 PM IST
Highlights

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 50 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 50 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறுதியில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து,  காய்கறிச் சந்தை திருமழிசையிலும், மாதவரத்தில் பழ மார்க்கெட்டும்,  வானகரத்தில் பூ மார்க்கெட்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடந்த மாதம் 28ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது. 

முதல்கட்டமாக 200 மொத்த வியாபார கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மேலும், காய்கறி வாங்க வரும் சில்லறை வியாபாரிகள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 9 மணிவரை காய்கறிகளை வாங்கி செல்ல  அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் நேரடியாக காய்கறி வாங்க தடைவிதிக்கப்பட்டது. மேலும் சில்லறை வியாபாரிகள் மார்க்கெட்டுக்குள் ஆட்டோ, பைக், மினி சரக்கு வேன் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

குறிப்பாக மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சி.எம்.டி.ஏ. நிர்வாகம் சார்பில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. கடந்த மாதம் 18-ம் தேதி முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 22 நாட்களில் 2800-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு   மாவட்டங்களை சேர்ந்த 50 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம்  அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!