
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் உள்ள காயப்பாக்கம் ஏரி பாசன கால்வாயை ஆக்கிரமித்து, அப்பகுதி மக்கள், பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி, ஆரணிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், ஆக்கிரமிப்பு காரணமாக கால்வாய் சுருங்கியதை அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள், நிலத்தை அரசிடம் ஒப்படைக்க முன் வந்தனர்.
ஆனால், ஒருவர் மட்டும் நிலத்தை ஒப்படைக்காததால், ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கைகளை அமல்படுத்த கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு, மனுதாரர் கிராமம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் சுருங்கி விட்டதாகவும், இதனால் பயிர் சாகுபடியை திறமையாக மேற்கொள்ள முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.
இதுபோன்ற கால்வாய்களை ஆக்கிரமிப்பில் இருந்து முழுமையாக மீட்கும் வகையில், கால்வாய்களை ஆய்வு செய்து மீட்டெடுக்க ஊராட்சி ஒன்றிய அளவில் குழுவை அமைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக விளக்கமளிக்கும்படி, தமிழக பொதுப்பணித் துறை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.