நளினி, முருகன் வாட்ஸ் ஆப் வீடியோ கால் பேச அனுமதி... ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி தீர்ப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 17, 2021, 5:53 PM IST
Highlights

நளினி, முருகன் ஆகியோர் லண்டனில் உள்ள முருகனின் சகோதரியிடமும் இலங்கையிலுள்ள முருகனின்  தாயாருடனும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதிக்க கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜிவ் கொலை வழக்கின் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா? அல்லது  விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து  பதிலளிக்க மத்திய அரசுக்கு  உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன்  அமர்வில்  விசாரணை  நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசு சார்பில்  பன்நோக்கு விசாரணை முகமையின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து கடந்த ஜூலை 27 ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.  ராஜீவ் கொலை வழக்கில் உள்ள அயல்நாட்டு தொடர்புகள் குறித்த விசாரணை இன்னும் முடிவடையாத  நிலையில், நளினி மற்றும் முருகனை வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன்  பேச அனுமதிப்பது வழக்கு விசாரணையை பாதிக்கும் எனவும், சிறை அதிகாரிகள் மூலம் அவர்கள் பேசுவதை கண்காணித்தாலும்  முக அசைவு மற்றும் உருவ அசைவில் கருத்துக்களை பரிமாற்றக் கூடும் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து சிறைத் துறை தரப்பில்   2011 ஆம் ஆண்டு அரசாணையின் படி சிறைக்கைதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதி இல்லை எனவும், இந்தியாவிற்குள் உள்ள உறவினர்களுடன்  10 நாளைக்கு ஒரு முறை, மாதம் ஒன்றுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல்  3 அழைப்புகள் மேற்கொள்ள அனுமதிக்க படுவதாகவும், எனினும் அது சிறைவாசிகளின் அடிப்படை உரிமை இல்லை எனவும், சிறைத்துறை கண்காணிப்பாளரின் அனுமதிக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தார்.

முருகன் கடந்த ஏப்ரல் மாதம் கூட, வேலூரில் உள்ள அவரது சகோதரியுடன் பேசியதாகவும், நளினியும் கடந்த மார்ச் மாதம் அவரது உறவினர்களுடன் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார். தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய்க்கு  ஆறுதல் கூற, சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அழைப்பை பதிவு செய்துகொள்ளும் வசதியுடன் பேச அனுமதிக்கலாமே என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன்,வேலுமணி அமர்வு நளினி, முருகன் ஆகியோர் லண்டனில் உள்ள முருகனின் சகோதரியிடமும் இலங்கையிலுள்ள முருகனின்  தாயாருடனும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
 

click me!