வெறும் எச்சரிக்கை மட்டும் விடுவோன்னு நினைச்சீங்களா?... சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published May 21, 2021, 3:00 PM IST
Highlights

ஆனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் கொரோனா நோயாளிகள் மற்றும் உறவினர்கள் வெளியே சுற்றுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. 

சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. என்ன தான் மருத்துவமனைகள், சித்தா சிகிச்சை மையங்கள் என அமைக்கப்பட்டாலும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தொற்று குறைவாக உள்ளவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் கொரோனா நோயாளிகள் மற்றும் உறவினர்கள் வெளியே சுற்றுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு கொரோனா பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் விதிகளை மீறி வெளியே நடமாடியதாக 5 நபர்களிடம் இருந்து ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி குறிப்பில்: "கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் முன்களத் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருசிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வருவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

தொற்று பாதித்த நபர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டால் அவர்களிடமிருந்து முதன்முறை ரூ.2,000 அபராதம் வசூலிக்கவும், அதனையும் மீறி மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வரும் நபர்களை பெருநகர சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரேனா பாதுகாப்பு மையத்தில்  தங்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக புகார்கள் இருப்பின், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 044-2534520 தொலைப்பேசி வாயிலாக புகாராக தெரிவிக்கும்படி 18.5.2021 அன்று செய்தி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இதுவரை பெறப்பட்ட 12 புகார்கள் மீது வருவாய்த்துறை அலுவலர்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 6 புகார்களில் விதிமீறல் இல்லை எனவும், ஒரு நோயாளி உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. மீதமுள்ள 5 நபர்களிடமிருந்து தலா ரூ.2,000 வீதம் ரூ.10,000 அபராதமாக வசூலிக்கப்பட்டு, அவர்கள் இனிவரும் நாட்களில் வெளியே வரக்கூடாது மீறினால், கொரேனா பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பாதித்த நபரோ அல்லது அவரோடு தொடர்பில் இருந்த நபர்களோ வெளியில் நடமாடும் போது பிறருக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் மாநகராட்சிக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

click me!