சென்னையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு பஸ் சேவை தொடங்கியது... பஸ்ஸில் பயணிக்க கடும் கட்டுப்பாடுகள்..!

By Asianet TamilFirst Published Sep 1, 2020, 8:58 AM IST
Highlights

தமிழகத்தில் நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் அமலுக்கு வந்தன. சென்னையில் 5 மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24 அன்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மே மாதத்துக்குப் பிறகு பல தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடர்கிறது. தற்போதும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் செப்டம்பர் 30 வரை கட்டுபாடுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரிதும் எதிர்பார்த்த பேருந்து சேவைகளை தொடங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் பேருந்து சேவைகள் இன்று தொடங்குகின்றன. சென்னையில் 5 (161 நாட்கள்) மாதங்களுக்குப் பிறகு இன்று காலை முதல் பேருந்து சேவைகள் தொடங்கின. தற்போது மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இன்று சுமார் 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் சென்னை மாவட்ட எல்லைகள் வரை மட்டுமே சென்று வரும். பேருந்துகளில்  22 முதல் 24 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இருக்கையில் ஒரு பயணி மட்டுமே அனுமதிக்கப்படுவார்.

 
பயணிகள் பேருந்தின் பின்பக்கமாக ஏறி முன் பக்கமாக இறங்க வேண்டும். பின்பக்கம் ஏறும்போது பேருந்து பட்டிக்கட்டின் பக்கவாட்டில் வைக்கப்பட்டிருக்கும் கிருமி நாசினியைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பேருந்தில் பயணிக்க முகக் கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் இல்லாமல் பயணிகள் பேருந்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஓட்டுநர்கள், நடத்துனர்கள் முகக்கவசம், கையுறை அணிந்துதான் பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
 

click me!