மகாபலிபுரம் முதல் சென்னை வரை 50 கி.மீ. கடலில் நீந்திக் கடந்த சிறுவன்!

By SG Balan  |  First Published Apr 2, 2024, 11:37 PM IST

சென்னையைச் சேர்ந்த ஹரேஷ் பரத் மோகன் என்ற சிறுவன் 50 கி.மீ கடலில் நீந்திக் கடந்து ஆசிய சாதனை படைத்துள்ளார்.


சென்னையைச் சேர்ந்த ஹரேஷ் பரத் மோகன் என்ற சிறுவன் மகாபலிபுரம் முதல் சென்னை வரை 50 கி.மீ கடலில் நீந்திக் கடந்து ஆசிய சாதனைப் புத்தகத்திலும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

ஹரேஷின் சாதனை பற்றிக் கூறும் அவரது தாய் நிர்மலா தேவி, "என் மகன் ஹரேஷ் ஒன்றரை வயது ஆனபோது தான் அவனுக்கு ஆட்டிசம் என்று தெரிந்தது. துறுதுறு என்று  ஹைப்பர் ஆக்டிவாக இருந்தான். பேச்சு வரவில்லை. எனவே படிக்க வைக்க முடியவில்லை. ஏதாவது அவனுக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபட வைக்கலாம் என்று பார்த்தபோது நீர் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். நீரில் விளையாடுவது என்றால் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டான். 

Tap to resize

Latest Videos

undefined

போகப்போக அதில் ஆர்வம் அதிகரித்தது தண்ணீர் நீச்சல் என்றால் அவன் மகிழ்ச்சியாக தென்பட்டான். எனவே அதில் நாங்கள் ஈடுபடுத்துவது என்று முடிவெடுத்தோம். எனவே அவனது தந்தை சிறுவயதில் இருந்து அவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். பிறகு அவனுக்குத் தீவிரமாக நீச்சல் கற்றுக் கொடுத்தோம். அவன் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்று பயிற்சியாளரை வைத்து கற்றுக் கொடுத்தோம்.

உயர் அழுத்த மின்கம்பிகளுக்குக் கீழ் நின்று போன் பேசினால் மொபைல் வழியாக மின்சாரம் பாயுமா?

சக போட்டியாளருடன் போட்டியாக நீந்தி குறிப்பிட்ட இலக்கைத் தொட்டு வருவது போன்றவற்றில் அவனுக்கு ஆர்வம் இல்லை. அது அவனுக்குச் சரிப்பட்டு வரவில்லை. அவனுக்கு ஸ்டாமினா நன்றாக இருக்கிறது. தனியே அவனுக்குப் பயிற்சி கொடுங்கள் என்று நண்பர்கள், சில பயிற்சியாளர்கள் சொன்னார்கள். எனவே தனியாள் பயிற்சியாக அவனுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தோம்.

அதன்படி எங்களுக்கு நல்ல பயிற்சியாளராக வந்து சேர்ந்தவர்தான் கார்த்திக் குணசேகரன். அவர் இல்லாவிட்டால் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாது. என் மகனை அவர், தன் உடன் பிறந்த தம்பி போல் பார்த்துக்கொண்டார். நீண்ட தூரம் நீந்துவதில் அவனுக்கு ஆர்வம் வந்த பிறகு,முதலில் நாங்கள் 2023 அக்டோபர் 7ஆம் தேதி தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை ஹரேஷ் யை நீந்த விட்டோம். ஆறு மணி நேரம் என்பது இலக்காக இருந்தது. ஆனால் அன்று கடலில் நிலவரம் மிகவும் மோசமாக இருந்தது. ஒரு அடி நகர்ந்தால் அலை அவனை மூன்று அடி பின்னுக்குத் தள்ளியது.அந்த அளவிற்கு  அலையின் சீற்றம் இருந்தது.

அப்படிப்பட்ட நிலையிலும் 27 கி.மீ தூரத்தை  11 மணிநேரம் 52 நிமிடங்கள் 20 வினாடிகளில் நீந்தி, தனுஷ்கோடியை அடைந்தான். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது,  அடுத்து அதை விடப் பெரிதாகச் செய்ய வேண்டும் என்று யோசித்தோம். அதன்படி மகாபலிபுரத்தில் இருந்து சென்னையைக் கடப்பது என்று நாங்கள் திட்டமிட்டோம். 

அதன்படி மகாபலிபுரத்தில் நள்ளிரவு இரண்டு மணிக்கு தொடங்கி நீந்த ஆரம்பித்தான். நீந்தத் தொடங்கிய 10 -15 நிமிடங்களில் அவன் மீது பாம்பு ஏறியது. அதனால் சற்று பதற்றம் அடைந்து மீண்டும் சுதாரித்துக் கொண்டு நீந்திக் கொண்டிருந்தபோது ஜெல்லி மீன்கள் தொந்தரவு செய்தன. இதையெல்லாம் தாங்கி 15.00.21 நேரத்தில் அதாவது 15மணி நேரம் 21வினாடிகளில்  சென்னை கண்ணகி சிலையை அடைந்தான்.

இந்தச் சாதனை சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. ஐந்தாண்டுகளாக பயிற்சியாளர் கடுமையாகப் பயிற்சி அளித்தார்.அவனது தந்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். கடலில் நீந்துவது என்பது சாதாரணமானதல்ல. இப்படி நீந்திய போது உப்பு நீர் பட்டு வாய் எல்லாம் வெந்து விட்டது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் இந்தச் சாதனையைச் செய்து இருக்கிறான். இது ஓர் ஆசிய சாதனைதான்.

அவன் இதைச் செய்துள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆசிய சாதனையும் இந்திய சாதனையும் இவனைப் போன்ற மற்ற குழந்தைகளுக்கு  ஊக்கமாகவும் தூண்டுதலாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

திமுகவின் காலை உணவுத் திட்டம் உலகத்துக்கே முன்னோடி! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

click me!