இடுப்பில் மண்சட்டி.. தலையில் கொசுவலை... அமைச்சரிடம் மனு கொடுத்து பாஜக தலைவி அதிரடி!!

By Asianet TamilFirst Published Aug 29, 2019, 4:17 PM IST
Highlights

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் இடுப்பில் மண்சட்டியுடனும், தலையில் கொசுவலை போர்த்தியும் வந்து மனு அளித்த பாஜக மகளிரணி தலைவியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்சவேணி. இவர் நகர பாஜக மகளிரணி தலைவியாக இருக்கிறார். அந்த பகுதியில் ஏற்படும் மக்கள் குறைகளை போக்குவதற்காக அதிகாரிகளை அவ்வபோது சந்தித்து மனு அளிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது அங்கு பாஜக நகர மகளிரணி தலைவியான அம்சவேணியும் மனு அளிக்க வந்திருந்தார். அவர் இடுப்பில் மண்சட்டியை வைத்துக்கொண்டும், தலையை கொசுவலையால் போர்த்திக்கொண்டும் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து மனு அளித்தார்.

இதுபற்றி கூறிய அம்சவேணி, அவர் வசிக்கும் திருவொற்றியூர் 6 வது வார்டு பகுதியில் அதிகமான கொசுத் தொல்லை இருப்பதாக கூறினார். மேலும் வெகுநாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிகழ்வதாகவும் குறிப்பிட்டார். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அமைச்சரை சந்திக்க இடுப்பில் மண்சட்டி மற்றும் தலையில் கொசுவலை போர்த்தி வந்ததாக குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தால் முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

click me!