பாரதியாருக்கும் காவியா..? குடியரசு தின ஊர்வலத்தில் வெடித்த சர்ச்சை..!

By Manikandan S R SFirst Published Jan 27, 2020, 11:54 AM IST
Highlights

பள்ளிக்கல்வி துறை சார்பாக வந்த வாகனத்தில் மகாகவி பாரதியாரின் சித்திரம் பொறிக்கப்பட்டிருந்தது. பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டைப்படத்தில் பாரதியாரின் புகைப்படம் காவி நிற முண்டாசு அணிந்து இருப்பதுபோல அதில் பொறிக்கப்பட்டிருந்தது.

தேசத்தின் 71 வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார். குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ கலந்த கொண்டார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்,முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகளின் வாகன அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வி துறை சார்பாக வந்த வாகனத்தில் மகாகவி பாரதியாரின் சித்திரம் பொறிக்கப்பட்டிருந்தது. பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டைப்படத்தில் பாரதியாரின் புகைப்படம் காவி நிற முண்டாசு அணிந்து இருப்பதுபோல அதில் பொறிக்கப்பட்டிருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழ் புத்தகத்தின் அட்டையில் பாரதி படம் காவி முண்டாசுடன் இருந்தது அப்போதே சர்ச்சையை கிளப்பியது. அந்த நேரத்தில் அதுகுறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை பாரதியார் படம் பொறிக்கப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் நிறம் மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது காவிநிற முண்டாசுடன் குடியரசு தின ஊர்வலத்தில் பாரதியார் படம் இடம்பெற்றிருப்பதும் மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Also Read: கம்பீரமாய் வந்த அய்யனார்..! தமிழ்ச் சமூகத்தின் காவல் தெய்வத்தை பெருமைபடுத்திய மோடி அரசு..!

click me!