வாகனங்களில் பேட்டரி திருடும் கும்பல்… - மர்மநபர்களுக்கு வலை

By Asianet TamilFirst Published Jul 24, 2019, 2:00 AM IST
Highlights

காரில் வந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் பேட்டரி திருடும் கும்பல் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.

காரில் வந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் பேட்டரி திருடும் கும்பல் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.

திருப்போரூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீடுகளை குறிவைத்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தன. சில வீடுகளில் பூட்டுகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டன. இதில் ஒன்றில் கூட இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக எந்த திருட்டு சம்பவமும் நடக்கவில்லை. இதனால் மக்கள் ஓரளவு நிம்மதியுடன் இருந்தனா். இந்தவேளையில், கடந்த 2 நாட்களாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து பேட்டரி திருடும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

திருப்போரூர் கிழக்கு மாடவீதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (25). இறால் மீன் வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இவருக்கு சொந்தமான பைக்கை தனது வீட்டின் வெளியே நிறுத்தி இருந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, அவரது பைக்கை காணவில்லை.

இதுகுறித்து கன்னியப்பன், திருப்போரூர் போலீசில் புகார் செய்தார். மேலும் தனது நண்பர்களுடன் பல இடங்களில் தேடிப்பார்த்தபோது கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் நெம்மேலி சாலையில் புதர் ஒன்றில் அவரது பைக் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

அந்த பைக்கின் பூட்டு உடைக்கப்பட்டு, வண்டியை இயக்கும் மின் வயர்கள் அறுக்கப்பட்டிருந்தன. மாம்நபர்கள், பைக்கை திருடி சிறிது தூரம் தள்ளிச்சென்று வண்டியை இயக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியவில்லை. இதனால், பைக்கைபுதரில் வீசி சென்றது தெரிந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரபீக் என்பவரது தண்ணீர் கேன் சப்ளை செய்யும் 2 வேன்களில் இருந்து பேட்டரிகள் திருடப்பட்டிருந்தன. இதையடுத்து அப்பகுதியில் இருந்த திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

அதில், நவீன கார் ஒன்றில் வந்த மர்மநபர்கள், லோடு வேன்களில் இருந்து பேட்டரிகளை திருடிச் செல்வது தெரிந்தது. இந்த கேமரா பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த வீடியோ பதிவுகள் திருப்போரூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த கேமரா காட்சிகளில் தெரியும் வண்டியின் பதிவு எண்ணை வைத்து போலீசார் பேட்டரி திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியப்பனின் பைக்கையும், அந்த காரில் வந்த மர்மநபர்கள் திருடி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

click me!