நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம்..! தமிழக அரசு அறிவிப்பு..!

By Manikandan S R SFirst Published May 22, 2020, 12:13 PM IST
Highlights

சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் ஆட்டோக்கள் செயல்பட வேண்டும் என்றும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்க வேண்டுமெனவும் உத்தரவு வந்திருக்கிறது. 

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தபோதும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு உச்சமடைந்து இருக்கிறது. இதனிடையே நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தற்போது 4ம் கட்டத்தை எட்டியுள்ளது.

மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டது. எனினும் பாதிப்புகள் குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைகளில் மாநில அரசுகள் தளர்வுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் பாதிப்பு குறைவாக இருக்கும் 25 மாவட்டங்களில் போக்குவரத்து உள்ளிட்ட விதிகளில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. எனினும் அதில் ஆட்டோக்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் ஆட்டோக்கள் செயல்பட வேண்டும் என்றும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்க வேண்டுமெனவும் உத்தரவு வந்திருக்கிறது. பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் கிருமி நாசினிகளை ஓட்டுநர்கள் தெளித்து தினமும் மூன்று முறை சுத்தப்படுத்த வேண்டும் என அறிவிறுத்தியிருக்கும் அரசு ஓட்டுநர்களும், பயணிகளும் சமூக விலகலை கடைபிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறியுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை.

click me!