University Exam: கல்லூரி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..!

By vinoth kumarFirst Published Jan 10, 2022, 1:10 PM IST
Highlights

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. முதல்வர் ஆலோசனைப்படியே அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டம் ஆடியது. இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், தடுப்பூசி பணியையும் விரைவுப்படுத்தப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கையை பார்த்து மத்திய அரசே பாராட்டு தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,000 நெருங்கியது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு 6000ஐ கடந்துள்ளது. 

இதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்பதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி;- தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. முதல்வர் ஆலோசனைப்படியே அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் செய்முறை தேர்வு நடைபெறும். எனவே, விடுமுறையைப் பயன்படுத்தி பாடங்களை படித்து மாணவர்கள் தேர்வுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக,தேர்வுக்காக மாணவர்களுக்கு விடுமுறை ‘study holiday’ விடப்பட்ட நிலையில், இந்த விடுமுறை நாட்களில் கல்லூரிகள், வகுப்புகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார். மேலும், கல்லூரிகள் திறப்பு குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்கப்படும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 
 

click me!