சிமென்ட் குடோனாக மாறிய வேளாண் கூட்டுறவு சங்க கிடங்கு

By Asianet TamilFirst Published Aug 7, 2019, 9:54 AM IST
Highlights

திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிடங்கில், சிமெண்ட் மூட்டைகள் உட்பட பயனற்ற பொருட்களை வைத்துள்ளதால், விவசாயிகள் தானியங்களை கிடங்கில் வைத்து சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிடங்கில், சிமெண்ட் மூட்டைகள் உட்பட பயனற்ற பொருட்களை வைத்துள்ளதால், விவசாயிகள் தானியங்களை கிடங்கில் வைத்து சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

அறுவடை காலங்களில் வேளாண் விளை பொருட்களின் சந்தை விலை குறைவாகவே இருக்கும். கிராமப்புறங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் விளை பொருட்களை விஞ்ஞான முறைப்படி சேமித்து நல்ல விலை வரும்போது விற்பனை செய்ய உள்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலான கிராமங்களில் இல்லை.

இதையடுத்து அனைத்து வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கிடங்கு கட்டப்பட்டது. அதே நேரத்தில் அரசின் மானியத்துடன் கட்டப்படும் இத்தகைய ஊரக கிடங்குகளில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சேமித்து வைத்து சந்தையில் நல்ல விலை வரும்போது விற்பனை செய்து அதிக லாபம் பெற ஏதுவாகும்.

இக்கிடங்குகளில் விஞ்ஞான முறைப்படி வேளாண் விளைபொருட்கள் சேமிக்கப்படுவதால் விளைபொருட்களின் தரம் பாதுகாக்கப்படுவதோடு, விளைபொருட்களை சாதாரணமாக சேமிக்கும்போது ஏற்படும் சேதாரம் தவிர்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சேதாரம் இல்லாமலும், தரம் குறையாமலும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பின்புறம் விவசாயிகளின் நலன்கருதி கிடங்கு கட்டப்பட்டு உள்ளது. இந்த கிடங்கில், ஊராராட்சி நிர்வாகம் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி வைத்து உள்ளனர். மேலும், பயனற்ற பொருட்களையும் கிடங்கில் வைத்துள்ளனர்.

இதனால், உர மூட்டைகள், விதைகள் வைக்கவும் இடமில்லை. மேலும், விவசாயிகளும் தங்களது விளைபொருட்களை வாடகைக்கு வைக்க இயலவில்லை. எனவே, பாப்பரம்பாக்கம் கூட்டுறவு கடன் சங்க கிடங்கில் உள்ள பயனற்ற பொருட்களை அகற்றி, விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

click me!