சாலையின் நடுவே திடீர் பள்ளம் … ராயபுரத்தில் பரபரப்பு

By Asianet TamilFirst Published Jul 17, 2019, 12:27 PM IST
Highlights

சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், ராயபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

சாலையின் நடுவே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், ராயபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

சென்னை ராயபுரம் மன்னார்சாமி கோயில் சாலையில், ஆங்கிலேயேர் காலத்தில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய் அமைந்துள்ளது. சென்னையில் பல புயல்கள் தாக்கியபோது, ராயபுரம் பகுதியில் சிறிது தண்ணீர் தேங்கி நிற்காத படி, இந்த கால்வாய் வடிவமைத்து கட்டப்பட்டது.

பாரிமுனை – திருவொற்றியூர் இணைக்கும் முக்கிய சாலையாக இந்த சாலை அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த சாலையில் சுமார் 4அடி அகலத்தில், 4அடிக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. உடனடியாக குடிநீர் வாரிய அதிகாரிகள், அந்த பள்ளத்தை சீரமைத்தனர்.

இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில், பழைய ராயபுரம் காவல் நிலையம் அருகில் திடீரென சிறிய பள்ளம் ஏற்பட்டது. பின்னர், வாகனங்களின் போக்குவரத்து காரணமாக சுமார் 10அடிக்கு மெகா பள்ளம் ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து ராயபுரம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பள்ளம் ஏற்பட்ட இடத்தில் தடுப்பு ஏற்படுத்தி, வாகனங்களை மாற்றுப்பாதையாக அனுப்பினர். பின்னர், குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் குடிநீர் வாரிய கூடுதல் செயற்பொறியாளர் விவேகானந்தன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பொக்லைன் இயந்திரம் மூலம், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை சீரமைத்தனர். தொடர்ந்து தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் ராயபுரம் போக்குவரத்து போலீசார், பள்ளம் ஏற்பட்ட இடத்தில் தடுப்பு ஏற்படுத்தி, வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பினர். குடிநீர் வாரிய ஊழியர்கள் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

2வது நாளாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணி நடந்ததால் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் வாகனங்கள் ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெரு வழியாக மாற்றிவிடப்பட்டது.

இதையொட்டி காலை, மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, கால்வாயில் உயரழுத்த வாயு ஏற்பட்டதால், தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இதனால், மண் சரிந்து சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனை சீரமைத்து, மீண்டும் இதேபோல் பள்ளம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 6 மாதத்துக்கு முன் பள்ளம் ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள் முறையாக சீரமைக்கவில்லை. அந்த நேரத்திலேயே சரி செய்து இருந்தால், இதுபோன்று மீண்டும் ஏற்பட்டு இருக்காது. இப்போதாவது, அதிகாரிகள் முறையாக திட்டமிட்டு, பணிகளை செய்ய வேண்டும் என்றனர்.

click me!