தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா.. 5000ஐ நெருங்கிய பாதிப்பு

By karthikeyan VFirst Published May 6, 2020, 8:11 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 4829ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக தினமும் 500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகபட்சமாக 771 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகளை செய்யும் வகையில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 52 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. எனவே நாளுக்கு நாள் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுவருகிறது. கடந்த 2-3 நாட்களாக சராசரியாக 12 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகபட்சமாக 13,281 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 771 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து, இதுதான் ஒருநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை. கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களால் தான் மற்ற மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக பாதிப்பு தாறுமாறாக அதிகரித்துவருகிறது. 

வழக்கம்போல இன்றும் சென்னையில் அதிகபட்ச பாதிப்பு. சென்னையில் இன்று 324 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக இன்று அரியலூரில் அதிகபட்சமாக 188 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரியலூரில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 222ஆக அதிகரித்துள்ளது. கடலூரில் 95 பேருக்கு இன்று தொற்று உறுதியானதால் கடலூரில் பாதிப்பு எண்ணிக்கை 324ஆக அதிகரித்துள்ளது.

இன்று 31 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே குணமடைந்தோரின் எண்ணிக்கை 1516ஆக அதிகரித்துள்ளது. 2 பேர் உயிரிழந்திருப்பதால் உயிரிழப்பு 35ஆக உயர்ந்துள்ளது. 3275 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 

click me!