போர்வெல் மூலம் தண்ணீர் திருடிய 3 டேங்கர் லாரிகள் பறிமுதல்

By Asianet TamilFirst Published Jul 25, 2019, 12:12 AM IST
Highlights

மாதவரம் அருகே, மாத்தூர் பகுதி ஆழ்துளை கிணற்றில் நிலத்தடி நீர் திருடிய லாரிகளை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதவரம் வருவாய்த் துறையினர் விரைந்து வந்து தண்ணீர் திருடிய 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

மாதவரம் அருகே, மாத்தூர் பகுதி ஆழ்துளை கிணற்றில் நிலத்தடி நீர் திருடிய லாரிகளை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதவரம் வருவாய்த் துறையினர் விரைந்து வந்து தண்ணீர் திருடிய 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

மாதவரம் பால் பண்ணை, மஞ்சம்பாக்கம், மாத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள ஒருசில மாந்தோப்புகளில் தனியார் சிலர் ராட்சத ஆழ்துளை குழாய் அமைத்து மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக உறிஞ்சி லாரிகள் மூலம் நட்சத்திர விடுதிகள், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால் சுற்றுவட்டார பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு நிலத்தடி நீர் திருடுவதை கண்டித்து பொது சேவை அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனாலும், குடிநீர் திருட்டு தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில் மாத்தூரில், ஒரு மாந்தோப்பில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நிலத்தடி நீரை திருடிக்கொண்டு தனியார் லாரி ஒன்று காமராஜ் சாலைக்கு வந்தது.

இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனி தலைமையில் பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து மாதவரம் தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் பசுபதி, கிராம நிர்வாக அலுவலர் லெனின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் சிறைபிடித்து வைத்திருந்த லாரியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

பின்னர் மாத்தூர் பகுதி முழுவதும் தாசில்தார் சரவணன் சோதனை செய்து நிலத்தடி நீரை திருடிய மேலும் 2 லாரிகளையும் பிடித்து பறிமுதல் செய்தார். இதையடுத்து 3 லாரிகளையும் மாதவரம் பால் பண்ணை போலீசில் ஒப்படைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பழனி கூறுகையில், மாத்தூர் பகுதியில் ஏராளமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுமதி இல்லாமல் செயல்படுவதோடு நிலத்தடி நீரை திருடுகின்றன.

வெளியில் இருந்து குடிநீர் கொண்டு வருவதாக சுத்திகரிப்பு நிறுவனங்கள் பொதுமக்களை ஏமாற்றுகின்றன. எந்த பகுதியிலும் நிலத்தடி நீரை ராட்சத குழாய் மூலம் திருட கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆனால் அதையும் மீறி இவர்கள் செயல்படுகிறார்கள். எனவே மாத்தூர் பகுதியில் செயல்படும் அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து தண்ணீர் திருடும் கும்பல் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

click me!