தமிழ்நாட்டில் சோகம்: இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு.. பாதிப்பு, இறப்பு இரண்டுமே உச்சம்..!

By karthikeyan VFirst Published Jun 13, 2020, 6:18 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,697ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

அந்தவகையில் நேற்று அதிகபட்சமாக 18,231 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று பரிசோதனை எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 17,911 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், 1989 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,697ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாலில் 1487 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 30,444ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1362 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 23,409ஆக அதிகரித்துள்ளது. 18,878 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு குறைவாக இருந்தது ஆறுதலாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 0.7% என்கிற அளவில் இருந்துவந்த நிலையில், கடந்த சில தினங்களாக உயிரிழப்பு அதிகரித்துவருவதால், இறப்பு விகிதம் ஒரு சதவிகிதத்தை நெருங்கிவிட்டது.
 

click me!