60 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் இல்லாமல் 7 குடும்பங்கள் அவதி: கண்டு கொள்ளுமா தமிழக அரசு?

By Manikanda PrabuFirst Published May 26, 2024, 1:04 PM IST
Highlights

அரியலூர் மாவட்டத்தில் 60 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வரும் 7 குடும்பங்கள், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வேதனை தெரிவித்துள்ளனர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 60 ஆண்டு காலமாக மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் அகதிகளைப் போன்று 7 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக போராடியும் பலனளிக்காததால் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியை உடனே நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக குடும்பத்தோடு அனைவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கண்ணீர் மல்க அக்குடும்பத்தினர் அறிவித்த சம்பவம் காண்போரைக் கண்கலங்க வைத்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடகடல் கிராமம் கீழத்தெரு காலனியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (60). கூலி வேலை செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் ராஜீவ் காந்தி,  கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறவினர்கள் மதியழகன், இளையபெருமாள், மகேந்திரன், மணிகண்டன் ஆகிய 6 ஆறு பேரும் ராஜமாணிக்கம் வீட்டின் அருகருகில் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.

Latest Videos

ராஜமாணிக்கத்தின் உறவினரான அண்ணாமலை மகன்கள் அழகானந்தம், ரெங்கராஜ் ஆகியோருக்கும், ராஜமாணிக்கத்திற்கும் இடப் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள முன் விரோதம் காரணமாக அழகானந்தம் மற்றும் ரெங்கராஜ் ஆகிய இருவரும்  ராஜமாணிக்கம் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்தினருக்கு மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்க கூடாது என பிரச்சனை செய்து, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. 

இந்த நிலையில் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி கேட்டு பலமுறை போராடியும் எந்தப் பயனும் கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜமாணிக்கத்தின் மகன் ராஜீவ் காந்தி (45) உடல் நலக்குறைவால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென இறந்து விட்டார். இவருடைய இழப்பை தாங்க முடியாமல் மீளா துயரத்தில் ராஜமாணிக்கம் குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். 

ரீமல் புயல்: மதுரை டூ துபாய் விமானம் ரத்து - ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதம்!

இவர்களது வீட்டில் குடிநீர் இணைப்பும் இல்லை, மின்சார வசதியும் இல்லாமல். தினந்தோறும் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் அலைந்து தண்ணீர் எடுத்து வரவேண்டும். அதேபோன்று மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில் கொசுக்கடியிலும், விஷ பூச்சிகள் கடியிலும் வாழ்ந்து வருகின்றனர். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்சாரத் துறைக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு, குடிநீர் மற்றும் மின்சார வசதி கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் குடும்பத்தோடு அனைவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இது காண்போரை கண்கலங்க செய்தது.

click me!