நானே டிராவிட்டிடம் அறிவுரை கேட்குறப்ப.. உங்களுக்கு என்ன கேடு..? இந்திய வீரர்களை தெறிக்கவிட்ட பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Sep 18, 2018, 1:32 PM IST
Highlights

இங்கிலாந்தில் எப்படி ஆட வேண்டும் என இந்திய பேட்ஸ்மேன்கள் ராகுல் டிராவிட்டிடம் ஆலோசனை கேட்க தவறிவிட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்தில் எப்படி ஆட வேண்டும் என இந்திய பேட்ஸ்மேன்கள் ராகுல் டிராவிட்டிடம் ஆலோசனை கேட்க தவறிவிட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என இந்திய அணி இழந்தது. இந்த தோல்வியின் எதிரொலியாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. வெளிநாட்டு தொடர்களுக்கு ராகுல் டிராவிட்டை பேட்டிங் ஆலோசகராகவும் ஜாகீர் கானை பவுலிங் ஆலோசகராகவும் நியமிக்க சச்சின், கங்குலி, லட்சுமணன் அடங்கிய குழு பரிந்துரைத்தது. ஆனால் அதற்கு ரவி சாஸ்திரி தடையாக இருந்ததால் முதலில் ஒப்புக்கொண்ட ராகுல் டிராவிட் பின்னர் பின்வாங்கினார். 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் சிறப்பாக ஆடியவர் ராகுல் டிராவிட். இந்திய அணியின் தடுப்பு சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க முடியாமல் போனது. ராகுல் டிராவிட் பேட்டிங் ஆலோசகராக செயல்பட்டிருந்தாலோ, அல்லது அவரை தொடர்புகொண்டு இந்திய வீரர்கள் ஆலோசனை பெற்றிருந்தாலோ அது வீரர்களுக்கு பயனாக இருந்திருக்கும். 

மிகப்பெரிய ஜாம்பவானை இந்திய வசம் வைத்துக்கொண்டே இந்திய அணி தோற்றுவிட்டது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான், அவரே ராகுல் டிராவிட்டை தொடர்பு கொண்டு பயனுள்ள ஆலோசனைகளை பெற்றதாகவும் இந்திய வீரர்கள் அதை செய்திருந்தால் இங்கிலாந்து மண்ணில் சோபித்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். 

இதுதொடர்பாக பேசியுள்ள யூனிஸ் கான், 2004ம் ஆண்டு இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்துகொண்டிருந்தபோது, டிராவிட்டை தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டேன். நான் ஒரு ஜூனியர். அவர் சீனியராக இருந்தாலும் எனது அறைக்கே வந்து எனக்கு ஆலோசனைகளை வழங்கினார். அவரது ஆலோசனைகள் எனக்கு பயனுள்ள வகையில் இருந்தன. எனது பேட்டிங்கை மேம்படுத்திக்கொள்ள உதவின. அந்த வகையில் இந்திய பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்து தொடரின் போது ராகுல் டிராவிட்டிடம் ஆலோசனைகளை பெற்றிருக்கலாம் என கருத்து தெரிவித்தார். 

இந்தியாவும் பாகிஸ்தானும் களத்தில் கடுமையாக மோதிக்கொண்டாலும் களத்திற்கு வெளியே எதிரணி வீரர்களாக இருந்தாலும்கூட ஆலோசனைகள் வழங்குவதும் கருத்து பரிமாற்றமும் இருப்பதுதான் சிறந்த ஸ்போர்ட்மேன்ஷிப். அந்த வகையில், டிராவிட் எப்போதுமே பேட்டிங்கில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் மிகச்சிறந்த மனிதர் என்பதையும் யூனிஸ் கானின் இந்த பேட்டி மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டியுள்ளது. 
 

click me!