
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு 410 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா.
டெல்லியில் இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. இதில் முரளி விஜய்-விராட் கோலி ஜோடி அபாரமாக ஆடி சதம் அடிக்க, முதல் நாளில் இந்தியா 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 371 ஓட்டங்கள் எடுத்தது. அதையடுத்து, ஆடிய இந்தியா 536 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, 3-ஆம் நாள் ஆட்ட முடிவில், 130 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சண்டிமல் 147 ஓட்டங்கள், லக்ஷன் சன்டகன் ஓட்டங்கள் இன்றி களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், 4-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. சன்டகன் ஒருபுறம் துணைநிற்க மறுபுறம் சண்டிமல் 150 ஓட்டங்கள் எடுத்தார். அவர், 164 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, இஷாந்த் சர்மா வீசிய ஓவரில் தவனிடம் கேட்ச் கொடுத்து சண்டிமல் வெளியேறினார்.
அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மொத்தம் 135.3 ஓவர்களில் 373 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அதிக பட்சமாக இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 163 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. தொடக்க வீரரான முரளி விஜய், 9 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
தவனுடன் ஜோடி சேர்ந்தார் ரஹானே. எனினும், அவரும் சொற்ப ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதைத் தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.
புஜாரா, தவன் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 49 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சில்வா வீசிய பந்தில் புஜாரா ஆட்டமிழந்தார். பின்னர், கேப்டன் கோலி களமிறங்கினார்.
இந்த நிலையில், தவன் 67 ஓட்டங்கள் எடுத்து வெளியேற ரோஹித் களமிறங்கினார். அரை சதம் கண்டபோது கோலியும் ஆட்டமிழக்க ரோஹித்துடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.
ரோஹித் 49 பந்துகளில் அரை சதம் எடுத்த நிலையில், இந்திய அணியின் ஸ்கோர் ஐந்து விக்கெட் இழப்புக்கு 246-ஆக இருந்தது. அப்போது, கேப்டன் கோலி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, 410 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கருணாரத்னே 13 ஓட்டங்கள், சமரவிக்ரமா 5 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர், சில்வாவுடன் ஜோடி சேர்ந்த லக்மல் ஓட்டங்கள் எதுவுமின்றி பெவிலியன் திரும்பினார். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் சில்வா 13 ஓட்டங்களுடனும் மேத்யூஸ் ஓட்டங்கள் இன்றியும் களத்தில் உள்ளனர்.
நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 31 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இன்னும் 379 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 5-வது நாளான இன்று இலங்கை அணி வீரர்கள் விளையாட உள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.