முதல் செஷனில் 3 விக்கெட்டுகள்!! வெஸ்ட் இண்டீஸை வச்சு செய்யும் இந்தியா

By karthikeyan VFirst Published Oct 12, 2018, 12:12 PM IST
Highlights

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் செஷனிலேயே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் செஷனிலேயே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இதிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும் ஆடிவருகின்றன. 

ஹைதராபாத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கி போட்டி நடந்துவருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக பவல் மற்றும் பிராத்வைட் களமிறங்கினர். 

இந்த போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் பிராத்வைட். பிராத்வைட் மற்றும் பவல் இருவரும் நிதானமாக தொடங்கினர். 

வேகப்பந்து வீச்சாளர்களால் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாதது ஒருபுறமிருக்க, ஷர்துல் தாகூர் 4வது ஓவரை வீசிக்கொண்டிருந்தபோது காயத்தால் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து அஷ்வின் பந்துவீச தொடங்கினார். 

அஷ்வின் வீசிய 6வது ஓவரின் 5வது பந்து பவலின் கால்காப்பில் பட, இந்திய வீரர்கள் அப்பீல் செய்தனர். அம்பயரும் அவுட் கொடுத்தார். ஆனால் பவல் ரிவியூ கேட்டார். அதில் பந்து பேட்டில் இன்சைட் எட்ஜ் ஆனது தெரியவந்தது. இதையடுத்து பவலுக்கு கொடுக்கப்பட்ட அவுட் கேன்சல் செய்யப்பட்டு பவல் ஆட்டத்தை தொடர்ந்தார். 

எனினும் அவரது ஆட்டம் நீடிக்கவில்லை. அஷ்வின் வீசிய 12வது ஓவரின் முதல் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பவல். இதையடுத்து பிராத்வைட்டுடன் ஹோப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி வெறும் 20 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், பிராத்வைட்டை எல்பிடபிள்யூ ஆக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் குல்தீப்.

இதையடுத்து ஹோப்புடன் ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியையும் இந்திய அணி நிலைக்கவிடவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்த நிலையில், ஹோப்பை வெளியேற்றினார் உமேஷ் யாதவ். 31.3 ஓவருக்கு 3 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 86 ரன்கள் எடுத்த நிலையில், உணவு இடைவேளை விடப்பட்டது. 
 

click me!