தம்பி பிஞ்சுலே பழுத்துட்டாரு.. லட்சுமணன் யாரை, எதற்கு இப்படி சொல்றாரு தெரியுமா..?

By karthikeyan VFirst Published Oct 8, 2018, 2:44 PM IST
Highlights

பிரித்வி ஷா வயதுக்கு மிஞ்சிய முதிர்ச்சியுடன் ஆடுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் பாராட்டியுள்ளார். 
 

பிரித்வி ஷா வயதுக்கு மிஞ்சிய முதிர்ச்சியுடன் ஆடுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் பாராட்டியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்தார். 134 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. களமிறங்கியது முதலே களத்தில் ஆதிக்கம் செலுத்தினார். வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை பவுண்டரிகளுக்கு விரட்டிக்கொண்டே இருந்தார். குறிப்பாக பேக்ஃபூட் ஷாட்களை அபாரமாக ஆடினார். 

டெஸ்ட் கிரிக்கெட்டின் வழக்கமான பேட்டிங்கை ஆடாமல், ஒருநாள் போட்டி போல ஆடினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகிறோம்; அதனால் நன்றாக ஆட வேண்டும் என்ற அச்சமோ பதற்றமோ இல்லாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார் பிரித்வி. இவரது ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் மெச்சினர். கிரிக்கெட் ரசிகர்களும் இவரது ஆட்டத்தை கொண்டாடினர். இவரது பேட்டிங் ஸ்டைல் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை ஒத்திருப்பதால், இந்திய அணியின் அடுத்த சச்சின் என அழைக்கப்படுகிறார். மேலும் இவரது ஆட்டத்தை பார்த்த ரெய்னா, பிரித்வி ஷா சேவாக்கை நினைவுபடுத்துவதாக தெரிவித்தார். 

பிரித்வி ஷாவை சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகியோரின் கலவை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் புகழ்ந்தார். பிரித்வி ஷா, இளம் வயது சச்சின் மற்றும் கவாஸ்கரை நினைவுபடுத்துவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பவுலர் குர்ட்னி வால்ஷ் புகழ்ந்திருந்தார். 

பேக்ஃபூட் ஷாட்களை நன்றாக ஆடும் பிரித்வி ஷா, ஆஸ்திரேலியாவிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவிப்பார் என்று கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இவ்வாறு பிரித்வி ஷா பாராட்டுகளை குவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணனும் பிரித்வி ஷாவை பாராட்டியுள்ளார். கல்ஃப் நியூஸிற்கு லட்சுமணன் எழுதியுள்ள கட்டுரையில், முதல்தர போட்டிகளில் எப்படி ஆடினாரோ அதே மாதிரியே சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது இயல்பான ஆட்டத்தை ஆடுகிறார் பிரித்வி ஷா. இந்த இளம் வயதிலேயே தனது பலத்தையும் ஆட்டத்தையும் நன்றாக அறிந்து வைத்து ஆடுகிறார் பிரித்வி. அவரது வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருக்கிறார் பிரித்வி. இந்திய அணிக்காக நீண்டகாலம் ஆடுவார் என லட்சுமணன் தெரிவித்துள்ளார். 
 

click me!