
விஜய் ஹசாரே தொடரில் டெல்லி அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஜார்கண்ட் வீரர் விராட் சிங் தனி வீரராக நின்று அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளார்.
விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 20ம் தேதியுடன் விஜய் ஹசாரே தொடர் முடிவடைகிறது. முதல் அரையிறுதியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் டெல்லி மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் கவுதம் காம்பீர், பவுலிங் தேர்வு செய்ததால், ஜார்கண்ட் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
ஜார்கண்ட் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான இஷான் கிஷான், முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக, அதைத்தொடர்ந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்து, 85 ரன்களுக்கேஎ ஜார்கண்ட் அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட் சிங், நதீமுடன் இணைந்து அணியை மீட்டெடுத்தார்.
ஆனால் நதீம் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். நெருக்கடியான சூழலில் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்து அணியை மீட்டெடுத்தார் விராட் சிங். ஒருமுனையில் விராட் சிங் பொறுப்புடன் பேட்டிங் ஆட, மறுமுனையில் கடைசி வரிசை வீரர்களான வருண் ஆரோன், சுக்லா ஆகியோர் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 71 ரன்கள் குவித்த விராட் சிங், கடைசி விக்கெட்டாக அவுட்டானார்.
இதையடுத்து ஜார்கண்ட் அணி, 48.5 ஓவருக்கு 199 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. 200 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி ஆட உள்ளது.
ஜார்கண்ட் அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது, பொறுப்பாக ஆடினார் விராட் சிங். விராட் என்ற பெயரில் மற்றொரு பொறுப்பான இளம் பேட்ஸ்மேன் உதித்திருக்கிறார்.