
இந்தியாவுக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் விதி மீறியதற்காக தென் ஆப்ரிக்க வீரர் ரபாடாவுக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்திய அணி, நான்காவது போட்டியில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று (பிப்ரவரி 13, 2018) நடைபெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ராம், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு ஓரளவு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
இந்த தொடரில் ரோஹித் ஷர்மா, அபாரமாக விளையாடி அசத்தலாக சதம் அடித்தார். அவர் 126 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ர்ஸர்கள் உள்பட 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி (36 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (30 ரன்) ஓரளவுக்கு கைகொடுத்தனர்.
கடைசி 10 ஓவர்களில் பெரிய அளவில் ரன் குவிக்க இயலாத வகையில் தென்னாப்பிரிக்காவின் வேகங்கள் மிரட்டினர். இதனால் இறுதிக்கட்ட 10 ஓவர்களில் இந்தியா 55 ரன்களுக்கு அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 275 ரன்கள் இலக்குடன் தென்னாப்பிரிக்கா களம் இறங்கியது. 42.2 ஓவர்களில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட் டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.இதன்மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதுடன், தொடரையும் 4 க்கு 1 கணக்கில் கைப்பற்றியது.
முன்னதாக, ஷிகர் தவான் 23 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 34 ரன்கள் சேர்த்து ரபாடா பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அப்போது, அதனை கொண்டாடும் வகையில் தவானை வம்பிழுக்கும் வண்ணம் ரபாடா நடந்து கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் ரபாடாவுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.